சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.50 கோடியில் மேம்பாலம் கட்டுமான பணிக்கு டெண்டர்: 2,100 அடி நீளம், 25 அடி அகலத்தில் அமைகிறது; 2 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க உத்தரவு

சென்னை: ராஜிவ் காந்தி சாலை மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையை இணைக்கும் வகையில், மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.56 கோடியில் மேம்பால கட்டுமான பணிக்கு டெண்டர் அறிவிப்பை நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது. மேலும், இப்பணியை 2 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்ட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை மாநகரில் மத்திய கைலாஷ் சந்திப்பு தான் ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலையை இணைக்கிறது. இந்த சாலைகளில் ஐடி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

இதனால், மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால், வாகனங்கள் கடந்து செல்ல 10 முதல் 25 நிமிடங்களுக்கு மேலாகிறது. எனவே, ராஜிவ் காந்தி சாலை மற்றும் சர்தார் பட்டேல் சாலையில் ஏற்படும் நெரிசலை குறைக்க, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் கோட்டூர்புரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள், மத்திய கைலாஷ் சந்திப்பு சிக்னலில் நிற்காமல் செல்லும் வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதையேற்று, கடந்த சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ராஜிவ் காந்தி சாலை மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையை இணைக்கும் வகையில் ரூ.50 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் ராஜிவ் காந்தி சாலையில் இரண்டு வழித்தட மேம்பாலம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு, மேம்பாலம் கட்டுமான பணிக்கு ரூ.31.44 கோடியும், மழைநீர் வடிகால்வாய், நடைபாதை அமைக்க ரூ.5 கோடியும், வழிகாட்டி பலகை வைக்க ரூ.40 லட்சமும், காம்பவுண்ட் சுவர் அமைக்க ரூ.35 லட்சம், மேம்பாலத்தில் விளக்குகள் வைக்க ரூ.50 லட்சம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க ரூ.5 லட்சம், மரங்கள் வைக்க ரூ.3 லட்சம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மேம்பாலம் மொத்தம், 2,100 அடி நீளம், 25 அடி அகலத்தில் கட்டப்படுகிறது

தற்போது, இப்பால பணிக்கு  நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் கலந்து கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்கள் ஜூன் 21ம் தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, ஜூலை மாதத்தில் பணிகள் தொடங்கப்படுகிறது. இப்பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது  என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: