ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் திருப்பணி நடைபெற உள்ள 1250 கோயில்களின் விவரங்கள்: இணையதளத்தில் வெளியிட்டது அறநிலையத்துறை

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ள 1250 கோயில்கள் எவை என்பது தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று அறிநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள சிறு கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள கோயில் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியை கொண்டு திருப்பணி மேற்கொள்வதில் கடினமாக இருப்பதால் திருப்பணி நிதியை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இதையேற்று தற்போது ரூ.1 லட்சத்துக்கு பதிலாக ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாத கோயில்கள் கண்டறிந்து அக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அறிக்கை அனுப்பவும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டார். அதன்பேரில், 1338 கோயில்களில் திருப்பணி மேற்கொள்வது தொடர்பாக பட்டியல் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறிக்கையை கவனமுடன் பரிசீலித்ததில் 1250 கோயில்கள் திருப்பணி மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி காஞ்சிபுரம் கோட்டத்தில் 23 கோயில்களும், செங்கல்பட்டில் 36 கோயில்களும், திருவள்ளூரில் 35 கோயில்களும், வேலூர், விழுப்புரத்தில் தலா 40 கோயில்களும், கள்ளக்குறிச்சியில் 34 கோயில்களும், திருவண்ணாமலையில் 37 கோயில்களும், கிருஷ்ணகிரியில் 30 கோயில்களும், மயிலாடுதுறையில் 37 கோயில்களும், கும்பகோணத்தில் 16 கோயில்களும், தஞ்சாவூரில் 35 கோயில்களும், புதுக்கோட்டை, திருநெல்வேலியில் 40 கோயில்களும், நாகையில் 28 கோயில்களும், திருவாரூரில் 47 கோயில்களும், திருப்பூரில் 60 கோயில்களும், கரூரில் 42 கோயில்களும், திருச்சி, விருதுநகரில் தலா 20 கோயில்களும், பெரம்பலூரில் 46 கோயில்களும், மதுரையில் 32 கோயில்களும், திண்டுக்கல், கோவையில் தலா 35 கோயில்களும், தேனியில் 42 கோயில்களும், பரமக்குடியில் 31 கோயில்களும், சிவகங்கையில் 21 கோயில்களும், நாகர்கோவிலில் 28 கோயில்களும், தூத்துக்குடியில் 45 கோயில்களும், தென்காசியில் 26 கோயில்களும், சேலத்தில் 41 கோயில்களும், தர்மபுரியில் 23 கோயில்களும், நாமக்கல்லில் 39 கோயில்களும், ஈரோட்டில் 50 கோயில்கள் என 1250 கோயில்கள் திருப்பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.  இவ்வாறு திருப்பணி மேற்கொள்ளும் கோயில்களின் விவரங்களை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறநிலையத்துறை சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை எந்தெந்த கோயில்களில் நடக்கிறது என்ற விவரம் தெரியாத நிலையில் தற்போது, கோயில்கள் வாரியாக பட்டியல் வெளியிட்டு இருப்பது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: