சென்னையில் கொன்று காவேரிப்பாக்கத்தில் புதைப்பு தந்தை சடலத்தை தோண்டி எடுப்பதில் தாமதம்: மகனுக்கு போலீசார் வலை

சென்னை: சென்னை வளசரவாக்கம் ஆற்காடு ரோடு பகுதியை சேர்ந்த குமரேசன் (80). இவருக்கு சொந்தமான காம்ப்ளக்சில் 2வது தளத்தில் மகள் காஞ்சனாவுடன் இருந்தார். அந்த காம்ப்ளக்சின் முதல் தளத்தில் மகன் குணசேகரன் (55), அவரது மனைவி வசந்தி மற்றும் மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் குமரேசனுக்கு வடபழனி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சொந்தமாக காம்ப்ளக்ஸ் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தந்தை, மகனுக்கு இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி காஞ்சனா மந்தைவெளி பகுதியில் நடந்து வரும் வீட்டு வேலையை கவனிக்க சென்றுள்ளார்.

பின்னர் 19ம் தேதி மீண்டும் வீடு திரும்பியபோது, வீடு முழுவதும் ரத்தக்கறை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது தந்தையும் வீட்டில் இல்லை. சகோதரர் குணசேகரனை தொடர்பு கொள்ள முயன்றபோது போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த காஞ்சனா வளசரவாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் வழக்குப்பதிந்து விசாரித்தார். இதில் குமரேசனை அவரது மகன் குணசேகரன் கொலை செய்துவிட்டு, உடலை துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்து மினி வேன் மூலம் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள தஞ்சை நகர் பகுதியில் புதைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் இடத்தின் உரிமையாளரான ரியல் எஸ்டேட் புரோக்கர் வெங்கடேசன் (66), பேரல் புதைக்க பள்ளம் தோண்டிய பெருமாள் (60) ஆகிய இருவரிடமும் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். அப்போது குடோன் அமைக்க காலி வீட்டு மனையை குணசேகரன் வாடகைக்கு எடுத்துள்ளதும், சாமியார் செய்வினை நீக்கி பேரலில் அடைத்திருப்பதாக கூறி ரூ.700 கூலி கொடுத்து அந்த பேரலை புதைத்துவிட்டு தலைமறைவானதும் தெரிந்தது. தொடர்ந்து வீட்டு மனையில் புதைக்கப்பட்ட பேரலை நேற்று தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் பேரலை தோண்டி எடுக்க முடியவில்லை. இதையடுத்து பேரலை இன்று தோண்டி எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் தலைமறைவான குணசேகரனை தேடி வருகின்றனர். தொடர்ந்து 2 நாட்களாக போலீசார் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பேரலை தோண்டி எடுத்தால் மட்டுமே அதில் சடலம் உள்ளதா என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: