ஊரக பகுதிகளின் தரத்தை மேம்படுத்த ரூ.3,006 கோடி நிதி அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அரசாணை: ஏப்ரல் 4ம் தேதி தமிழக சட்டசபையில் 2022-23ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பாக, சாலை வசதி, விவசாயம், சுய உதவி குழுக்களுக்கு மரக்கன்று என மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஊரக பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், சிறு,குறு மற்றும் பட்டியலின, பழங்குடியின விவசாயிகளின் நிலத்தின் ஒரு பகுதியில் நாவல், மாதுளை, மா, பலா, சப்போட்டா, எலுமிச்சை போன்ற மரக்கன்றுகள் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 விவசாயிகள் என்ற வீதத்தில் நிலமேம்பாட்டு பணிகளோடு இணைந்து, மரக்கன்றுகள் நடும் பணி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 8.45 லட்சம் பழ மரக்கன்றுகள், ரூ.11.51 கோடியில் மேற்கொள்ளப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரசு வேலை உறுதி திட்டத்தின் கீழ் மகளிர் பங்களிப்பினை உயர்த்தவும், சுய உதவி குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் மூலம் புதிதாக 388 வட்டார அளவிலான நாற்றங்கால்கள் மற்றும் 1,500 தோட்டக்கலை நாற்றங்கால்கள் ஒன்றிய, மாநில நிதி பங்களிப்புடன் ரூ.92.12 கோடியில் ஏற்படுத்தப்பட உள்ளது. இரும்பு சத்துக் குறைபாடில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் 3,500 புதிய முருங்கை நாற்றங்கால்களில் 21 லட்சம் முருங்கை நாற்றுகள் வளர்க்கப்பட்டு, 10.50 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா 2 மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.

ஊட்டச்சத்து மிக்க சமுதாயத்தை உருவாக்கும் விதமாக ஊரக பகுதிகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பயன் பெறும் வகையில் சமூக நலத்துறையுடன் ஒருங்கிணைந்து 500 குழந்தை நேய அங்கன்வாடி மையங்கள் ரூ.59.85 கோடியில் கட்டப்படும். இக்கட்டடங்கள் கட்டுவதில் பழங்குடியினர் அதிகளவில் வசிக்கும் குக்கிராமங்கள், கிராம ஊராட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட எதுவாகவும் திட்ட பணிகளுக்காகவும் மொத்தமாக ரூ.3.006.09 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: