விலைவாசி கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைப்பு: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததின் தொடர்ச்சியாக விலைவாசி உயர்ந்து வந்தது. இந் நிலையில், ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 எனவும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.6 எனவும் நேற்று குறைத்துள்ளது. இதன்மூலம் விற்பனை விலையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் ரூ.7  குறையும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட காலத்தில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்து பேரலுக்கு 20 டாலருக்கு கீழ் வந்தது.

அந்த நேரத்தில் ஒன்றிய அரசு, தங்களின் கலால் வரியை உயர்த்திக் கொண்டு, விலை குறைப்பு பலனை மக்களுக்கு வழங்கவில்லை. பிறகு அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தது. அதிலும், நடப்பாண்டு ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டவுடன் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 130 டாலரை தாண்டியது. அந்த நேரத்தில், உபி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடந்ததால், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் நிலையாக வைத்துக் கொண்டனர். அந்த நேரத்தில் நாடு முழுவதும் சராசரியாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108ம், டீசல் ரூ.100ம் என்ற நிலையில் இருந்தது. இந்த வகையில் 137 நாட்கள் விலையில் மாற்றத்தை செய்யவில்லை.

தேர்தல் முடிந்த பின், மார்ச் 22ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு உயர்த்த தொடங்கியது. தினமும் 75, 76 காசு என உயர்த்தினர். ஏப்ரல் 6ம் தேதி வரை தொடர்ந்து இந்த

விலையேற்றம் இருந்தது. இதன்படி பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.10 வரை உயர்ந்தது.  அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக ஏப்ரல் 6ம் தேதிக்கு பின் நேற்று வரை 45 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் ஒரே விலையில் வைத்திருந்தனர்.

சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் ராமேஷ்வர் தெலி அளித்த பேட்டியில், ஒன்றிய அரசால் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த இயலவில்லை. கச்சா எண்ணெய்க்கு இறக்குமதி தேவையை சார்ந்திருப்பதால் பெட்ரோல், காஸ் விலை மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் விலை உயர்த்தப்படவில்லை. இதன்படி நேற்று பெட்ரோல் விலை டெல்லியில் ரூ.105.4, மும்பையில் ரூ.120.51, சென்னையில் ரூ.110.85 எனவும், டீசல் விலை டெல்லியில் ரூ.96.67, மும்பையில் ரூ.104.77, சென்னையில் ரூ.100.94 எனவும் இருந்தது. இந்நிலையில், ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதற்கான அறிவிப்பை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில் ஒன்றிய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், பண வீக்கம் முந்தைய ஆண்டுகளில் இருந்ததை விட கட்டுக்குள் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது உலகம் முழுவதும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வரும்போதிலும், உக்ரைன் போர் காரணமாக பொருட்களின் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பெரும்பாலான நாடுகளில் பண வீக்கமும், பொருளாதார தள்ளாட்டமும் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலின்போது கூட ஒன்றிய அரசு கரீப் கல்யாண் திட்டம் உட்பட பல திட்டங்கள் மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உலக அளவில் பாராட்டு கிடைத்துள்ளது.

சர்வதேச அளவில் சவாலான சூழ்நிலை நிலவும்போதும், பொருட்கள் சப்ளையில், குறிப்பாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உரம் விலை உயர்ந்தபோதும், ப்டஜெட்டில் உர மானியத்துக்காக ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ.1.10 லட்சம் கோடி வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 எனவும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.6 எனவும் குறைத்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால் விற்பனை விலையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் ரூ.7 குறையும். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்  என தெரிவித்துள்ளார்.

இதுபோல், கடந்த 2020ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கால் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதன் பின்னர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. குறிப்பாக, இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 விலையை தாண்டியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் கூட பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களும், ஒன்றிய அரசும் குறைக்கவில்லை. எனினும், சாமானிய மக்களின் சிரமத்தை குறைக்க, தமிழக அரசு பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைத்தது.

இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு கீழ் குறைந்தாலும், அதன் பின்னரும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்ததால் மீண்டும் ரூ.100 ஐ தாண்டியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் தீபாவளி பண்டிகையையொட்டி, ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவிப்பை வெளியிட்டது. தற்போது, மீண்டும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்த நிலையில்தான், 2வது முறையாக கலால் வரியை குறைத்துள்ளது. மேலும் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், இறக்குமதியை சார்ந்துள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மீதான வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இதுபோல், ஸ்டீல் பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும். அதேநேரத்தில், சில ஸ்டீல் பொருட்கள் மீது ஏற்றுமதி வரி வசூலிக்கப்படும். சிமென்ட் விலையை குறைக்கும் வகையில், நாடு முழுவதும் சிமென்ட் தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

* உயர்த்தியது எவ்வளவு? குறைத்தது எவ்வளவு?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. ஆனால், கச்சா எண்ணெய் விலை குறையும்போது கூட, அதன் பலன் மக்களுக்கு கிடைக்காத வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு உயர்த்தி வந்தது. 2014ம் ஆண்டு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.9.48 என இருந்தது. இது ரூ.32.90 ஆக உயர்ந்தப்பட்டது. அதாவது சுமார் மூன்றரை மடங்கு உயர்ந்து விட்டது. 2014-15 நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு கலால் வரி மூலம் ரூ.29,279 கோடி கிடைத்தது. இந்த வருவாய் 2020-21 நிதியாண்டில் ரூ.89,575 கோடியாக உயர்ந்து விட்டது என, நிதியமைச்சக புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. இதுபோல், டீசல் மீதான கலால் வரி 2014ம் ஆண்டுக்கு பிறகு 9 முறை உயர்த்தப்பட்டது. 2014ல் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3.56 ஆக இருந்தது. இது ரூ.31.80 ஆக உயர்த்தப்பட்டது. 2014-15 நிதியாண்டில், டீசல் கலால் வரி மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.42,881 கோடி கலால் வரி கிடைத்தது. இது 2020-21 நிதியாண்டில் ரூ.2.04 லட்சம் கோடியாக அதிகரித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பருக்கு பிறகு தற்போது மீண்டும் பெட்ரோல் மீதான கலால் வரியை நேற்று குறைத்துள்ளது.

* உஜ்வாலா பயனாளிகளுக்கு மட்டும் சமையல் காஸ் மானியம் ரூ.200

பெட்ரோல், டீசலை போல சமையல் காஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் 2வது முறையாக கடந்த 19ம் தேதி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் ரூ.3, வர்த்தக காஸ் விலை ரூ.8.50 உயர்த்தப்பட்டதை தொடர்ந்து  நாடு முழுவதும் சிலிண்டர் விலை ரூ.1000ஐ தாண்டியது. வீட்டு உபயோக காஸ் விலை டெல்லியில் ரூ.1002.50, கொல்கத்தாவில் ரூ.1,029, மும்பையில் ரூ.1002.50, சென்னையில் ரூ.1018.50, சேலத்தில் ரூ.1036.50 ஆக அதிகரித்துள்ளது.  இதேபோல், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.2,507, மும்பையில் ரூ.2,306 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சமையல் காஸ் மானியமாக ரூ.200 வழங்குவதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அதில் பிரதமர் உஜ்வாலா திட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு இந்த மானியம் கிடைக்கும். இதன்மூலம் நாடு முழுவதும் சுமார் 9 கோடி பேர் பலன் பெறுவார்கள் என கூறியுள்ளார். ஏற்கெனவே, சமையல் காஸ் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு மானியம் மிக சொற்பமாகவே கிடைத்து வந்தது. பலர், வங்கிக் கணக்கில் மானியம் வருவதில்லை என குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

* பெட்ரோலிய பொருட்கள் மூலம் ஒன்றிய அரசுக்கு இதுவரை வருவாய்  (மதிப்பு கோடி ரூபாயில்)

வருவாய்    2014-15    2015-16    2016-17    2017-18    2018-19    2019-20    2020-21    2021-22

(9 மாதங்கள்)

கச்சா எண்ணெய், பெட்ரோலிய வரிகள்    ரூ.1,26,025    ரூ.2,09,354    ரூ.2,73,225    ரூ.2,76,168    ரூ.2,79,847    ரூ.2,87,540    ரூ.4,19,884    ரூ.3,10,155

டிவிடென்ட் உள்ளிட்டவை மூலம்    ரூ.46,040    ரூ.44,943    ரூ.61,950    ரூ.59,994    ரூ.68,194    ரூ.46,775    ரூ.35,185    ரூ.44,109

ஒன்றிய அரசின் மொத்த வருவாய்    ரூ.1,72,065    ரூ.2,54,297    ரூ.3,35,175    ரூ.3,36,163    ரூ.3,48,041    ரூ.3,34,315    ரூ.4,55,069    ரூ.3,54,264

* ரூ.100க்கு கீழ் குறையவில்லை

கலால் வரி குறைக்கப்பட்ட பிறகும், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100க்கு கீழ் குறையாமல் உள்ளது. பெட்ரோல், டீசல் புதிய விலை நிலவரம்:

மாநிலம்    பெட்ரோல் (லிட்டருக்கு)    டீசல் (லிட்டருக்கு)

டெல்லி    ரூ.95.90    ரூ.89.67

மும்பை    ரூ.111.01    ரூ.97.77

சென்னை    ரூ.101.35    ரூ.93.94

Related Stories: