காட்டுயானை மின்சாரம் தாக்கி பலி

கூடலூர்: கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பலியானது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இங்குள்ள முருகன் கோயில் பகுதிக்கு நேற்று அதிகாலை 5 யானைகள் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து தேயிலைத்தோட்டம் வழியாக வந்துள்ளன. இதில் ஒரு யானை அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மின்கம்பியை துதிக்கையால் இழுத்துள்ளது. இதில், யானை மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் மற்றும் வனச்சரகர் கணேசன் உள்ளிட்ட வனத்துறையினர் இறந்த பெண் காட்டு யானையை பார்வையிட்டனர். முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்தனர். இதில், யானை மின்சாரம் தாக்கி இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் யானையின் உடல் பகுதிகள் அப்பகுதியில் புதைக்கப்பட்டது.

Related Stories: