கண்ணமங்கலம் அருகே சிங்கிரி கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே சிங்கிரி கோவிலுக்கு செல்லும் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் கத்தாழம்பட்டு ஊராட்சி  சிங்கிரி கோவில் கிராமத்தில் லட்சுமிநரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. கண்ணமங்கலம் நாகநதியின் வடகரையில் உள்ள சிங்கிரிகோவில் பகுதியில் இலங்காமலை அடிவாரத்தில் கி.பி.14ம் நூற்றாண்டில் முதலாம் சம்புவராய மன்னர் ராஜநாராயணன் என்பவரால் கோயிலாக எழுப்பப்பட்டது. ஆனால் கி.பி. 8ம் நூற்றாண்டில் லட்சுமி நரசிம்மர் சிறிய சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்திருப்பதை வரலாற்று சான்றுகள் பகிர்கிறது.

இவ்வளவு பழமையான கோயிலுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருடம் முழுவதும் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இக்கோயிலில் அடிக்கடி திருமணங்களும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சிங்கிரி கோவில் பஸ் நிறுத்தத்திலிருந்து கோயிலுக்கு செல்லும் தார்சாலை கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஜேசிபி மூலம்  தோண்டப்பட்டு இன்று வரை சீரமைக்கப்படாமல் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், மேல்வல்லம் பாலத்திலிருந்து இக்கோயிலுக்கு செல்லும் தார்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதற்கும், நடந்து செல்வதற்கும்  முடியாமல் பக்தர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: