மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு சிறப்பு ரயில் சேவை: இன்று துவங்கியது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இன்று துவங்கியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் தினமும் ஒரு முறை இயக்கப்படுகிறது. நூற்றாண்டுகளை கடந்த இந்த மலை ரயில் யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மலை ரயிலில் பயணம் செய்ய உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கோடை காலத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது இதையடுத்து கோடைகால சிறப்பு வாராந்திர ரயிலை இயக்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்தது.

இந்நிலையில், இன்று முதல் ஜூலை 22ம் தேதி தேதி வரை 2 மாதங்களுக்கு வாரம் ஒருமுறை மட்டும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சிறப்பு மலை ரயில் சேவை இன்று துவங்கியது. காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து 172 பயணிகளுடன் ஊட்டிக்கு மலை ரயில் சென்றது. இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், வழக்கமாக ஒரு ரயில் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், டிக்கெட் கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருந்து வந்தது, தற்போது கூடுதலாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், டிக்கெட் எளிதாக கிடைத்தது, குடும்பத்துடன் மலை ரயிலில் பயணம் செய்வது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர்.

Related Stories: