50 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுடன் கனமழை பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 33 பேர் பலி: பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல்

பாட்னா: பீகாரில் நேற்று மட்டும் ஒரே நாளில் மின்னல் தாக்கி 16 மாவட்டங்களை சேர்ந்த 33 பேர் பலியானதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்து, நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். பிரதமர் மோடி, இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடுமையான வெப்பக் காற்று வீசிவரும் நிலையில், தற்போது சில மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பீகார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘மாநிலத்தில் அடுத்த  மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்; பலத்த காற்றும் வீசும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும்’ என்று தெரிவிக்கப்பட்டது. பருவமழைக்கு  முந்தைய காலத்தில், பீகாரின் அனைத்து பகுதிகளிலும் பலத்த காற்று வீசுகிறது. கிழக்கு மற்றும் தென்கிழக்கு காற்றானது, வடக்கு பீகாரின் மேற்பரப்பில் 900 மீட்டர் உயரத்தில் வீசுகிறது. தெற்கு பீகாரில் மேற்கு மற்றும்  தென்மேற்கு காற்று மேற்பரப்பில் இருந்து 1.5 கிமீ உயரத்தில் வீசுகிறது.  இதன் தாக்கத்தால் பீகாரின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில், பீகார் மாநிலத்தில் 16 மாவட்டங்களில் பெய்த கனத்த மழையால் ஏற்பட்ட இடி, மின்னலில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘இடி, மின்னலில் சிக்கி 16 மாவட்டங்களை சேர்ந்த 33 பேர் பலியாகி உள்ளனர் (நேற்றிரவுடன் முடிந்த 24 மணி நேரத்தில்). உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இடி, மின்னலினால் ஏற்பட்ட வீடு சேதம் மற்றும் பயிர் சேதங்களை மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் நிவாரண உதவி வழங்கப்படும். மோசமான காலநிலையால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறேன்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது கிடைத்த தகவலின்படி, பீகார் மாநிலத்தின் பாகல்பூர் பகுதியில் மட்டும் இடி, மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். முசாபர்பூரில் 6 பேரும் அதிகபட்சமாக இறந்துள்ளனர். இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடக்கின்றன. இதனால் பல மணி நேரம் மின்சார விநியோகம் தடைபட்டது. பீகாரில்  மின்னல் தாக்கி 33 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘பீகார் மாநில அரசு, துரித நடவடிக்கை எடுத்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பீகாரின் பல மாவட்டங்களில் இடி, மின்னலினால் ஏற்பட்ட மழையால் பலர் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கிறது. இந்த துயரத்தை தாங்கும் சக்தியை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கடவுள் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பலி அதிகரிப்பு

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்கி சராசரியாக 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் கடந்த 2017ல் 2,885 பேரும், 2018ல் 2,357 பேரும், 2019ல் 2,876 பேரும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்தியாவில் 2001ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை மின்னல் தாக்கி 42,500 பேர் உயிரிழந்தனர். கடந்த ஏப்ரல் 1, 2020ம் ஆண்டு முதல் மார்ச் 31, 2021 தேதி வரை இந்தியாவில் மின்னல் தாக்கியதால் 1,619 பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலத்தில் 401 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 238 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 228 பேரும், ஒடிசாவில் 156 பேரும், ஜார்க்கண்ட்டில் 132 பேரும் பலியாகினர். இதுபோன்ற மின்னல் தாக்குதல்களில் விவசாயிகளே அதிகம் உயிரிழக்கின்றனர். இதற்குக் காரணம் பருவ மழைக் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை அவர்கள் தெரிந்துக் கொள்ளாததே என்று கூறப்படுகிறது.

Related Stories: