நெமிலி பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டது: பொதுமக்கள் மகிழ்ச்சி

நெமிலி: நெமிலி பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தினகரன் செய்தி எதிரொலியால் விரைவுப்படுத்தப்பட்டது. நெமிலி பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் புதிய தார்சாலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், சாலை சீரமைப்பு உட்பட ₹50 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. ஆனால், இந்த பணிகள் மந்தமாக நடப்பதாகவும், பல பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

குறிப்பாக, கழிவுநீர் கால்வாய் அமைக்க ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மந்தகதியில் நடக்கும் அனைத்து பணிகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டது.

அதன்படி, கழிவுநீர் கால்வாய் அருகே தோண்டப்பட்டு இருந்த  சாலை ஓரங்களில் மண் தள்ளப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories: