ஆட்சியில் இல்லாத நேரத்திலும் மக்களுக்காக பணியாற்றிய மாபெரும் இயக்கம் தான் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஊட்டி: உதகையில் 200வது ஆண்டு விழாவையொட்டி புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர்; பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள உதகைக்கு நான் வந்துள்ளேன். இயற்கை எழில் கொஞ்சும் உதகை மாவட்டத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. நான் முதலமைச்சரான பிறகு உதகையில் முதன் முறையாக நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. யுனெஸ்கோ அமைப்பு நீலகிரி மாவட்டத்தை உயிர்கொள் காப்பகமாக அறிவித்துள்ளது. உதகை மக்கள் அளித்த வரவேற்பு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. உதகையை போலவே எனது உள்ளமும் குளிர்ந்துள்ளது.

நீலகிரியில் அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என மிகப்பெரும் விழாவாக நடக்கிறது. திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. முதுமணலை சரணாலயத்தை விரிவுப்படுத்தி, ஒன்றிய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை தந்தது கலைஞர். ரூ.34 கோடி மதிப்பில் 20 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. உதகையில் தான் கலைஞர் பேருந்து போக்குவரத்துக் கழகங்கள் நாட்டுடமை ஆக்கி அறிவித்தார். நீலகிரி ஏரியை சீரமைத்ததும் கலைஞர் தான். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கியதும் கலைஞர் தான்.

நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கடை உரிமை பெயர் மாற்றம் செய்து நீட்டிப்பு செய்ய அனுமதி தந்தேன். உதகையில் 3வது குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து குடிநீர் பிரச்சனையை தீர்த்து வந்தது திமுக ஆட்சி தான். நீலகிரி மாவட்டத்திற்கு தேவையானதை எப்போதும் செய்து தர தயாராக இருப்பது திமுக அரசு. 2019ல் நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வீடுகளை இழந்தோரை சந்தித்து ஆறுதல் கூறினோம். ஆட்சியில் இல்லாத நேரத்திலும் மக்களுக்காக பணியாற்றிய மாபெரும் இயக்கம் தான் திமுக. இயற்கையும், மனிதனும் இணைந்து வாழும் வனப்பகுதியை காக்க அரசு திட்டமிட்டுள்ளது.

நீலகிரியில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்து சிறப்பான திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது. உதகையின் வனப்பரப்பை அதிகரிக்க திமுக அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் வனப்பரப்பை 33 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம், சுற்றுசூழல் வளாகம், ஏற்படுத்தப்படும். அந்நிய தாவரங்களை அகற்ற ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் கூறினார்.

Related Stories: