பரவலாக பெய்த கோடை மழையால் ஆழியார் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கோடை மழையால் ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம்  உயர்கிறது. பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியார் பாசனத்திட்டத்தில் சோலையார், பரம்பிக்குளம், ஆழியார், திருமூர்த்தி ஆகிய அணைகள் முக்கியமானவையாகும். இதில், பொள்ளாச்சியை அடுத்த 120 அடி கொண்ட ஆழியார் அணைக்கு கான்டூர் கால்வாய் மட்டுமின்றி சின்னாறு, அப்பர் ஆழியார், கவியருவி ஆகியவற்றில் இருந்தும் தண்ணீர் வருகிறது.

ஆழியார் அணையில் இருந்து, புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு மட்டுமின்றி, வழியோர கிராமங்களுக்கு குடிநீர் தேவைக்காகவும், கேரள மாநில பகுதிக்கும் என ஆண்டுதோறும் குறிப்பிட்ட டிஎம்சி தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த  ஆண்டில், ஜூன் முதல் பல மாதமாக பெய்த தென்மேற்கு  பருவமழையால் ஆழியார் அணை  நீர்மட்டம் விரைந்து உயர்வானது. இதனால் பல மாதங்களாக தண்ணீர் திறப்பு  தொடர்ந்து அதிகமானது.

அதன்பின், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் அவ்வப்போது பெய்த மழையால், ஆழியார் அணையின் நீர்மட்டம் கடந்த ஜனவரி மாதம் வரையிலும் 110 அடிக்கு மேல் இருந்தது. அதன்பின் மழையின்றி, பிப்ரவரி மாதத்திலிருந்து நீர்மட்டம் சரிய துவங்கியது. அவ்வப்பேது  அப்பர் ஆழியாரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டாலும், மழை இல்லாமல் கடந்த  ஏப்ரல் மாதம் துவக்கத்தில் நீர்மட்டம் 70 அடியானது. சில வாரத்துக்கு முன்புவரை தண்ணீர் வரத்து வினாடிக்கும் 100 கன அடிக்கும் குறைவாக இருந்தது.  

இந்நிலையில், சில வாரமாக சமவெளி பகுதியில் கோடை மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால், சில மாதத்திற்கு பிறகு, அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில் நேற்றைய  நிலவரப்படி ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து 450 கன அடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் தற்போது 90 அடியாக உயர்ந்துள்ளது. அதுபோல், டாப்சிலிப்பை அடுத்த மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.

கடந்த வாரத்தில் விநாடிக்கு 60 கன அடியே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 425 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. தற்போது நீர்மட்டம் 45 அடியாக உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: