சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு நில அளவீடு பணிக்கு வந்த என்எல்சி அதிகாரிகளை தடுத்து மக்கள் போராட்டம்

சேத்தியாத்தோப்பு, மே 21: என்எல்சி நிறுவனம் தனது நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டி கிராமத்தில் நில அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடலூர் மாவட்ட நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கரிவெட்டி கிராமத்துக்கு வந்தனர். இதற்கு கரிவெட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, சாத்தப்பாடி, ஊ.ஆதனூர் உள்ளிட்ட 7 கிராமங்களைச் சேர்ந்த  மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வீட்டுமனை மதிப்புக்கு அதிக பணம் தர வேண்டும். ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட மதிப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும் இதற்காக ஒரு உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த குழு விசாரணை முடிந்த பிறகு நிலங்களை எடுக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் கால அவகாசம் வழங்கி விட்டு திரும்பிச் சென்றனர்.

Related Stories: