கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் மக்கள் அவதி

பெரம்பூர்: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர் உள்ளிட்ட 8 மண்டலங்களில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு மலைபோல் தேங்கியுள்ள குப்பை கழிவுகளால் சுற்றுப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்த குப்பை கிடங்கில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

மளமளவென தீ பரவி அப்பகுதியில் உள்ள குப்பை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக மாறியது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர். தகவலறிந்து கொருக்குப்பேட்டை, சத்தியமூர்த்தி நகர், எம்.கே.பி.நகரில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட இடத்தை வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், ராயபுரம் மண்டல அலுவலர் மதிவாணன், பெரம்பூர் எம்எல்ஏ, ஆர்.டி.சேகர், 37வது வார்டு கவுன்சிலர் டில்லிபாபு ஆகியோர் பார்வையிட்டனர்.  தீ விபத்து காரணமாக சுற்றியுள்ள கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி ஆகிய பகுதி மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.

Related Stories: