70 ஆண்டுக்கு பின் நடந்த திருவிழா ெஹலிகாப்டரில் இருந்து தேர் மீது மலர்கள் தூவி மக்கள் உற்சாகம்

புதுக்கோட்டை, மே 21: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தில் ஆண்டியப்ப ஐய்யனார் கோயில் தேரோட்ட திருவிழா கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதன் பின்னர் திருவிழா நடை பெற வில்லை. இதனைத்தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் ஒன்றரை கோடி மதிப்பில் புதிய வைரத்தேர் ஒன்று செய்யப்பட்டு கடந்தாண்டு வெள்ளோட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேரோட்டம் நேற்று நடை பெற்றது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

70 ஆண்டுகளுக்கு பின் நடை பெற்ற இந்த தேரோட்டத்தை விமர்சையாக கொண்டாட தனியார் ஹெலிகாப்டர் ஒன்றை கிராம மக்கள் வாடகைக்கு ஏற்பாடு செய்தனர். பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டர் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தரையிறங்கியது. பின்னர் மலர்களை ஏற்றிச்சென்று ஹெலிகாப்டர் கொப்பம்பட்டி வந்தது.

அப்போது தெற்கு வீதியில் வைரத்தேர் வந்து கொண்டிருந்த போது அதன் மீது ஹெலிகாப்டர் மூலம் ரோஜா உள்ளிட்ட மலர்களை மக்கள் தூவி உற்சாகமாக கொண்டாடினர். பின்னர் ஹெலிகாப்டர் மீண்டும் ஆயுதப்படை மைதானம் வந்து அங்கிருந்து பெட்ரோல் நிரப்பிக்கொண்டு மீண்டும் பெங்களூர் புறப்பட்டு சென்றது.

Related Stories: