போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: ஈ.வெ.ரா சாலையில் தாசப்பிரகாஷ் சந்திப்பில் காலை நேரங்களில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை, ஈ.வெ.ரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. ஈ.வெ.ரா சாலை மற்றும் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து டாக்டர் அழகப்பா சாலை வழியாக செல்ல முடியாது.

* புரசைவாக்கத்தில் இருந்து கங்காதீஸ்வரர் கோயில் தெரு வழியாக வரும் வாகனங்கள் தாசப்பிரகாஷ் சந்திப்பை நோக்கி ராஜா அண்ணாமலை சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் கங்காதீஸ்வரர் கோயில் தெரு மற்றும் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி டாக்டர் அழகப்பா சாலை, வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் வலது புறமாக திரும்பி நாயர் பாயின்ட் சந்திப்பில் நேராகவோ, வலது மற்றும் இடது புறமாக திரும்பியோ செல்லலாம்.

* காசி பாயின்ட் சந்திப்பில்  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை  முதல் 10 நாட்களுக்கு  போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, பிள்ளையார் கோயில் தெரு, மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து கே.கே.நகர், வடபழனி மற்றும் கோயம்பேடு செல்லும்  வாகனங்கள் காசி பாயின்ட் சந்திப்பில் இடதுபுறம் திருப்பி சுமார் 160  மீட்டருக்கு சென்று காசி மேம்பாலம் அடியில் யூடர்ன் செய்து,  தங்கள்  இலக்கை அடையலாம். அசோக்நகர் 12வது அவென்யூ வழியாக வரும் கனரக வாகனங்கள்  கே.கே.நகர், வடபழனி மற்றும் கோயம்பேடு செல்லும் வாகனங்கள் வலது புறம் திரும்பி நாகாத்தம்மன் கோயில் தெரு வழியாக அசோக் நகர் 11வது  அவென்யூ செல்லலாம்.

*  மெக்கானிக்கல் சாலை சேத்துப்பட்டு சந்திப்பில் மாலை நேரங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்க, நாளை முதல் மாலை 6 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, ஹாரிங்டன் சாலையில் சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பு வழியாக நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்பர்டாங்க் சாலை செல்லும் வாகனங்கள், சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் நேராக மற்றும் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் சேத்துப்பட்டு சந்திப்பில் இடது புறமாக திரும்பி மெக்கானிக்கல் சாலை, டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் கீழ் பகுதி சாலை வழியாக சென்று மறுபடியும் வலது புறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை, மெக்கானிக்கல் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்புக்கு செல்லலாம்.

Related Stories: