நெல்லை கல்குவாரியில் 3 பேர் பலியான சம்பவத்தில் கர்நாடகாவில் தங்கியிருந்த உரிமையாளர், மகன் கைது: நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

நெல்லை, மே 21: நெல்லை கல்குவாரி நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியான சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் கர்நாடக மாநிலம் மங்களூரில் விடுதியில் தங்கியிருந்த போது தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 14ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் மாவட்ட எஸ்பி சரவணன் பரிந்துரையின் படி நாங்குநேரி ஏஎஸ்பி ரஜத் சதுர்வேதி விசாரணை நடத்தி வருகிறார்.

முன்னீர்பள்ளம் போலீசார் விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளரான திசையன்விளையைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மகன் குமார், லைசென்ஸ்தாரர் சங்கரநாராயணன், மேலாளர் ஜெபஸ்டின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் லைசென்ஸ்தாரர் சங்கரநாராயணன், மேலாளர் ஜெபஸ்டின் ஆகியோரை தனிப்படை போலீசார் ஏற்கெனவே கைது செய்தனர்.  செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது. அவர்கள் இருவரும் வெளிமாநிலம் தப்பிச் சென்று விட்டதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவல் கிடைத்தது.

இதையடுத்து கேரளா, கர்நாடக மாநிலத்துக்கு தனிப்படைகள் விரைந்தன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த செல்வராஜ் செல்போன் மூலம் உறவினர்களிடம் பேசியதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து செல்போன் சிக்னல் மூலம் மங்களூரில் லாட்ஜில் தங்கியிருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் மங்களூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகிய இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் இன்று நெல்லைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

Related Stories: