காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு

பென்னாகரம், மே 21: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கத்திற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை 3வது நாளாக  தொடர்ந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த 17ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 18ம் தேதி காலை விநாடிக்கு 25,000 கனஅடியாகவும், மாலை 30,000 கனஅடியாகவும் நீர்வரத்து இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் 20,000 கனஅடியாக சரிந்தது. இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் ஒகேனக்கல் காவிரிக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 45,000 கனஅடியாக அதிகரித்தது.

இதனால், ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயினருவியில் குளிப்பதற்கும், காவிரியில் பரிசல் இயக்குவதற்கும் கடந்த 18ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டு, நேற்று 3வது நாளாக தொடர்ந்தது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். நேற்று மாலை மாநில எல்லையான பிலிகுண்டுலு காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 50,000 கன அடியாக அதிகரித்தது. நீர்வரத்து நிலவரத்தை மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 29,072 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 29,964 கனஅடியாகவும், மாலை 4 மணிளவில் விநாடிக்கு 47,436 கனஅடியாகவும் அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. திறப்பை காட்டிலும், வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 111.10 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 112.77 அடியானது. மாலை 4 மணிக்கு 113.66 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 2.56 அடி வரையிலும் உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 83.71 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், ஒருசில நாட்களில் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மத்திய நீர்வள ஆணையம், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க அறிவுறுத்தி உள்ளது. இதனையடுத்து நேற்று மாலை, மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் உள்ள பண்ணவாடி பரிசல் துறையில், ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது.

Related Stories: