வளசரவாக்கத்தில் கொலை செய்து காவேரிப்பாக்கத்தில் அடக்கம்: தந்தையை கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் போட்டு புதைப்பு

* தலைமறைவான மகனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: தந்தையை மகனே சரமாரி அடித்து கொலை செய்துவிட்டு துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் போட்டு புதைத்துவிட்டு தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வளசரவாக்கம், ஆற்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன்(80). இவருக்கு குணசேகரன்(55) என்ற மகனும், காஞ்சனா, பரிமளா, யமுனா என்ற 3 மகள்களும் உள்ளனர். குமரேசனுக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் முதல் தளத்தில், அவரது மகன் குணசேகரன் எலக்ட்ரீசியன் வேலை செய்து, குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2வது தளத்தில் குமரேசன் தனது மகள் காஞ்சனாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், காஞ்சனா கடந்த 15ம் தேதி சென்னை மந்ைதவெளியில் உள்ள தனது கட்டிடத்தை புதுப்பிப்பதற்காக சென்றுள்ளார். பின்னர், கடந்த 19ம் தேதி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காஞ்சனா பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, வீடு முழுக்க ரத்த கரையுடன், துர்நாற்றம் வீசியுள்ளது. ஆனால், அவரது தந்தை குமரேசன், அண்ணன் குணசேகரன் ஆகியோரை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த காஞ்சனா வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அதில், தந்தை, மகனுக்கு இடையே சொத்து சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், குமரேசனை அடித்து கொலை செய்துவிட்டு, அவரது சடலத்துடன் தலைமறைவானதும் தெரியவந்தது. இதையடுத்து, குணசேகரன் கடைசியாக பேசிய செல்போன் எண்களை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கடந்த 17, 18ம் தேதிகளில், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் உள்ள ரியல் எஸ்டேட் புரோக்கர் வெங்கடேசன் என்பவரிடம் குணசேகரன் பேசியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார், நேற்று காவேரிப்பாக்கம் விரைந்து வந்து, ரியல் எஸ்டேட் புரோக்கர் வெங்கடேசனிடம் விசாரணை செய்தனர். அப்போது, தந்தையின் சடலத்தை பேரலில் எடுத்துவந்து காவேரிபாக்கத்தில் குணசேகரன் புதைத்தது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சொத்து தகராறில் குமரேசனை அடித்துக்கொன்ற மகன் குணசேகரன் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பேரலில் அடைத்து கொண்டு வந்து புதைத்துவிட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து, இன்று அந்த பேரலை போலீசார் தோண்டி எடுக்க உள்ளனர். அதன் பிறகே, கொலையான குணசேகரனின் சடலம் அதில் உள்ளதா என்பது தெரியவரும். பேரல் புதைக்கப்பட்டுள்ள அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குணசேகரனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குழி தோண்ட தொழிலாளிக்கு ரூ700 கூலி

ரியல் எஸ்டேட் புரோக்கர் வெங்கடேசன் கூறியதாவது:  குணசேகரனுடன்  ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, டைல்ஸ் குடோன் வைக்க மாதம் ரூ2 ஆயிரம் வாடகையில் காலி இடம் கேட்டார். அதன்பேரில், எனக்கு  சொந்தமான இடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்தேன். இந்நிலையில், குணசேகரன்  நேற்று முன்தினம் மதியம் மினிவேனில் 5 அடி உயரத்தில் ஒரு பேரல் கொண்டு  வந்தார். அதனை வாடகை எடுத்த இடத்தில் புதைக்க வேண்டும்.

எனக்கு வைத்த செய்வினையை சாமியார் நீக்கி இதில் வைத்துள்ளார். இதை மண்ணில்  புதைத்தால்தான் நான் நன்றாக வாழ்வேன் என கூறினார். எனவே, அவ்வழியாக வந்த  ஆடு மேய்க்கும் தொழிலாளி பெருமாள்(60) என்பவருக்கு, ரூ700 கூலி கொடுத்து பள்ளம் எடுத்து, அந்த பள்ளத்தில் பேரலை புதைத்துவிட்டு சென்றுவிட்டார். இவ்வாறு வெங்கடேசன்  தெரிவித்துள்ளார்.

Related Stories: