முந்தைய அதிமுக ஆட்சி மாசு கட்டுப்பாட்டு நிதியை தவறாக செலவு செய்துள்ளது: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: மாசு கட்டுப்பாட்டு நிதியை, முந்தைய  அதிமுக  ஆட்சி தவறாக செலவு செய்ததற்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: 2018 முதல் 2020-21ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு இருமுறை தலா ரூ.90 கோடி வீதம் சென்னை பகுதிக்குள் மாசுக்கட்டுப்பாட்டிற்காக ஒன்றிய அரசு ரூ.180 கோடி அளித்து வந்திருக்கிறது. இந்த நிதியை கடந்த அதிமுக அரசாங்கம் முழுக்க, முழுக்க சாலை மற்றும் வடிகால் அமைப்பதற்காகவே பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பருவ நிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் நுரையீரல்கள் நோய்கள் ஆகியவற்றின் பின்னணியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் காற்று மாசுபாடு கட்டுப்பாட்டு தரத்தை சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்கள் அடையவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த காரணத்தினால் குழந்தைகள், முதியோர், உடல்நிலை பாதிக்கப்பட்டோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் மருத்துவ கட்டமைப்புகள் மீது அழுத்தம் ஏற்படுவதோடு தனிநபர் மற்றும் குடும்பங்களின் மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கின்றன.

காற்றில் கலந்துள்ள நுண் துகள்களை கட்டுப்படுத்தவும், பசுங்கூட வாயுக்களை குறைக்கவும், சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் முந்தைய அதிமுக அரசு இந்நிதியை மாசுக்கட்டுப்பாட்டிற்கு பயன்படுத்தாமல் இதர பணிகளுக்கு பயன்படுத்தியது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது. மக்களின் உடல்நிலை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை புறக்கணிக்கும் செயலாகும்.

எனவே, இந்த நிதியை நான்காண்டுகளாக முறையாக பயன்படுத்தாத அதிகாரிகளுக்கு உரிய முறையில் அறிவுறுத்தல் அளிப்பதோடு, எதிர்காலத்தில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும், நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் காற்று மாசுத் தன்மையை கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: