சென்னை பெசன்ட் நகரில் 22ம் தேதி நினைவேந்தல் நிகழ்வு: வைகோ அழைப்பு

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க மதிமுகவினருக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலை தாக்குதலில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்காக நீதி வேண்டி தமிழர்கள் நாம் 13 ஆண்டுகளாக பன்னாட்டு சமூகத்திடம் போராடி வருகிறோம்.

இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம், மே பதினேழு இயக்கம் சென்னையில் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தி வருகிறது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆண்டுதோறும் தவறாது நான் கலந்துகொண்டு, கொல்லப்பட்ட பாலகன் பாலச்சந்திரன் உள்ளிட்ட ஈழத் தமிழர்கள், போராளிகள் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகிறேன். தற்போது மெரினா கடற்கரையில் நிகழ்வுகள் நடத்த நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால்,

இந்த ஆண்டிற்கான நினைவேந்தல் நிகழ்வினை நடத்திக்கொள்ள சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. எனவே, தமிழீழ இனப்படுகொலைக்கான 13ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வரும் மே 22 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறும். தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான இதில் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக குடும்பத்தினருடன் கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: