பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதால் தமிழ் தெரியாத ரயில்வே ஊழியர்கள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேட்டி

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுவடிவமைப்பு முதன்மை திட்டத்தை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ரயில்வே பொது மேலாளர் மல்லையா, சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், அஷ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய ரயில்வேயின் மாற்றம் இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைக்கும். பல்வேறு வகை ரயில் நிலையங்களின் மறுமேம்பாடு அந்த தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாகும்.

சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தின் பாரம்பரியத்தை முறையாக பராமரித்து, அதன் வசதிகளை உலக தரத்திற்கு இணையாக மறுசீரமைக்க வேண்டும். உலக தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் விமான நிலையம் போன்ற தனித்தனி வருகை மற்றும் புறப்படும் தாழ்வாரங்கள், எஸ்கலேட்டர்கள், லிப்ட்டுகள் மற்றும் ஸ்கை வாக்குகள் மூலம் தளங்களுக்கு தொந்தரவு இல்லாமல் செல்வதற்கான அம்சங்களை இந்த மறுசீரமைப்பு திட்டம் கொண்டிருக்கும். தமிழகத்தில் எழும்பூர், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய ஐந்து ரயில் நிலையங்கள் மேம்படுத்தபட உள்ளது.

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை. ரயில்வே துறையை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்று தரமான ரயில்கள், நல்ல பயண அனுபவத்தை பயணிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம். ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்கும்போது விபத்துக்குள்ளாகிறது. இதனை தடுக்க ரயில் தண்டவாளங்களை உயர்த்தவும், யானைகள் கடக்க தரைப்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக கேரளா, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 18 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பணியாற்றும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மாநில மொழி கற்க வேண்டும். மொழி தெரியாமல் உள்ளதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.

எழும்பூர் ரயில் நிலையம் ரூ750 கோடியில் மறுவடிவமைப்பு

எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 35  முக்கிய ரயில்கள் மற்றும் 240 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும்  24,129 பயணிகள் பயணிக்கின்றனர். இந்த ரயில் நிலையத்தின் மூலம் 2020-21ம் ஆண்டு மட்டும் ரூ125 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அதிகரித்து வரும் பயணிகளின் போக்குவரத்தை கையாளும் வகையில், ரூ760 கோடி செலவில் எழும்பூர் ரயில் நிலையம் மறுவடிவமைப்பு செய்யப்படும்.

Related Stories: