சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பேரறிவாளன் விடுதலை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு காரணங்களை கொண்டு சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை சம்பவத்தில் அவருடன் சேர்ந்து 17 பேர், குறிப்பாக காவல்துறை அதிகாரிகளும், காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை, மனநிலையை தமிழகத்தை ஆளும் ஆட்சியும், கட்சியும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகளும் உணர்ந்து செயல்படவேண்டும். சிறையில் உள்ள மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளும் திமுகவும், கூட்டணி கட்சிகளும் தங்களின் எண்ணத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.