டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணி வழக்கை விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ‘டெண்டர் முறைகேடு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கை விசாரிக்க தடையில்லை’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கை காட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதேப்போன்று அறப்போர் இயக்கமும் வழக்கு தொடர்ந்திருந்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில், தமிழக அரசு தரப்பில், ‘கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் எஸ்.பி.வேலுமணி சுமார் ரூ. 58 கோடி அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களை கைப்பற்றி அதன் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 2ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘‘எஸ்.பி.வேலுமணி விவகாரத்தை பொருத்தமட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது. இருப்பினும் சீலிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையின் நகலை அவரிடம் வழங்கிட வேண்டும்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவகாரங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து ஒரு இறுதி முடிவை மேற்கொள்ளும். இதற்காக மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் அனைவரும் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்’’ என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணியின் வழக்கை விசாரிக்க தடையில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Related Stories: