விமானத்தை நிலைகுலைய செய்த லேசர் ஒலி: சென்னை விமான நிலையத்துக்கு நோட்டீஸ்

சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்றுமுன் தினம் அதிகாலை 4.50 மணிக்கு சென்னையில் தரையிறங்க 146 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, அந்த விமானத்தின் முன்பகுதியில் பைலட் கேபினை நோக்கி சக்திவாய்ந்த லேசர் லைட் ஒளி பாய்ந்தது. அது பைலட் கண்களில் அடித்தது. இதனால் பைலட்  நிலைகுலைந்து திணறினாா். ஆனாலும் சமாளித்து கொண்டு, மிகவும் சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார்.

இதனால் விமானத்தில் இருந்த 146 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் உட்பட 153 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விமானி இது சம்பந்தமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், ரேடார் கருவி மூலமாக ஆய்வு செய்தனர். எந்தப் பகுதியிலிருந்து ஒளி வந்தது என்று ஆய்வு செய்தனர். பழவந்தாங்கல் பகுதியிலிருந்து, இந்த சக்திவாய்ந்த லேசர் ஒளி வந்திருப்பது தெரியவந்தது. பழவந்தாங்கல் பகுதியில் உள்ள உயரமான கட்டிடத்திலிருந்து விஷமிகள் யாரோ, சக்தி வாய்ந்த லேசர் கருவியிலிருந்து, இந்த ஒளியை விமானத்தை நோக்கி பாய்ச்சியது தெரியவந்தது.

இதுபற்றி சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்துகின்றனர். பழவந்தாங்கல் பகுதியில் உயர்ந்த கட்டிடங்கள் கட்டும் பணி நடக்கிறது. அங்கு ஏதேனும் லேசர் லைட்டுகள் பயன்படுத்தப்படுகிறதா என விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இதுபற்றி டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன், சென்னை விமான நிலையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  துபாயில் இருந்து வந்த எமிரேட் ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது 2 முறை லேசர் ஒளிபட்டது. இதுபற்றி உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னைக்கு விமான சர்வீஸை நிறுத்திவிடுவோம் என்று எமிரேட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது. அதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது நந்தம்பாக்கம் பகுதியில் கட்டிடத்தின் மேல் இரு ஒளி வந்தது தெரியவந்தது. அதில் கட்டிட தொழிலாளர்கள் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை பிடித்தனர்.

விசாரணையில் கட்டிட தொழிலாளிகள் டெல்லி மார்க்கெட்டில் லேசர் லைட்டை வாங்கி வந்தது தெரிந்தது. தீவிரவாத பின்னணி இல்லை. அவர்கள் விளையாட்டாக செய்த காரியம் என்பது தெரியவர அவர்கள் மீது சாதாரண வழக்கு பதிவு செய்து அனுப்பினர். இதன் காரணமாகவே பரங்கிமலை, திரிசூலம் மலை பகுதிகளில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து தற்போது வரை உள்ளது.

Related Stories: