இடைக்கால உத்தரவு 8 வாரத்துக்கு நீட்டிப்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு ஞானவாபி வழக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், மசூதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இந்த ஆய்வின்போது சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டததாக கூறப்படும் இடத்தை பாதுக்கக் கோரி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இஸ்லாமியர்கள் தொழுவதற்கு கட்டுப்பாடும் விதித்தது.

இதை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இந்த வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம். இஸ்லாமியர்கள் தொழுகைக்கு எண்ணிக்கை கட்டுப்பாடு விதிக்கக் கூடாது. அதே நேரம், சிவலிங்கம் இருக்கும் இடத்தையும் முழுமையாக பாதுகாக்க வேண்டும்,’ என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி சிவில் நீதிமன்றத்துக்கு பதிலாக, மூத்த நீதிபதி அடங்கிய மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் 8 வாரங்களுக்கு தொடரும். ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் தடையின்றி தொழுகை நடத்துவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். மசூதியில் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு, ஊடகங்களுக்கு தகவல் தரக் கூடாது. ஆய்வு அறிக்கை விவரங்களை சம்பந்தப்பட்ட நீதிமன்ற நீதிபதியிடம் மட்டுமே கொடுக்க வேண்டும்,’ என தெரிவித்தனர்.

Related Stories: