பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லை: திவாலாகிறது இலங்கை

* கடனை திருப்பி செலுத்த வழியில்லை

* மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பால் பரபரப்பு

கொழும்பு: பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்தது போன்ற நெருக்கடிகளால், ‘வாங்கிய கடனுக்காக எந்த தொகையையும் திருப்பி செலுத்த வாய்ப்பில்லை’ என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கே அறிவித்துள்ளார். இதனால், இலங்கை திவாலாகி வருவது அந்நாட்டிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு இலங்கை கடுமையான பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. சுற்றுலா மூலம் அந்நாட்டிற்கு கிடைத்து வந்த அந்நிய செலாவணி அடியோடு நின்று விட்டது.

மேலும், ராஜபக்சே அரசின் தவறான பொருளாதார கொள்கையால், நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. எரிவாயு, எரிபொருள் வாங்க அந்நிய செலாவணி இல்லாததால் இலங்கையில் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு, பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அன்றாட தேவைக்கான உணவுப் பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டு, விலைவாசி கடுமையாக உயர்ந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ராஜபக்சே அரசுக்கு எதிராக கொதித்தெழுந்தனர். இதனால், பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவரைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சேவால், ரணில் விக்ரமசிங்கே

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். பொருளாதாரத்தை மீட்க ரணில் பல்வேறு வழிகளிலும் போராடி வருகிறார். அண்டை நாடான இந்தியாவும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. சர்வதேச நிதியத்திடமும் கூடுதல் கடன் கோரி இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனாலும் இலங்கையின் பிரச்னை தீரவில்லை. சமீபத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ‘அடுத்த 2 மாதங்கள் இலங்கைக்கு மிக மிக சிரமமானது’ என எச்சரித்தார். ‘எரிபொருள் கொண்டு வந்த கப்பலுக்கு, அதற்கான கட்டணத்தை செலுத்தக் கூட அரசிடம் பணமில்லாததால் மக்கள் யாரும் எரிபொருளுக்காக பங்குகளில் வரிசையில் நிற்க வேண்டாம்’ என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு ஒருபுறம் அன்றாட செலவுகளுக்கே பணம் இல்லாமல் இலங்கை அரசு திண்டாடும் நிலையில், மறுபுறம் அந்நிய நாடுகளிடமும், சர்வதேச நிதி அமைப்புகளிடம் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் தவிக்கிறது. வெளிநாடுகள், வங்கிகள், சர்வதேச நிதியம் உள்ளிட்டவற்றில் மொத்தம் ₹3.82 லட்சம் கோடிக்கு இலங்கை கடன் வாங்கி உள்ளது. மேலும், அரிசி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்கிய வகையில் மட்டும் செலுத்த வேண்டிய தொகை ₹94 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்நிலையில், மொத்த கடன் தொகைக்கு இலங்கை செலுத்த வேண்டிய தவணைக்கான 1 மாத கால அவகாசம் கடந்த 18ம் தேதியுடன் முடிந்துள்ளது.

இதன் பிறகும் இலங்கை அரசால் தவணைத் தொகையை கட்ட முடியவில்லை. இதன் மூலம், வரலாற்றில் முதல் முறையாக, வாங்கிய கடனுக்கான தவணையை செலுத்த முடியாது என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நிதி தொடர்பான கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘‘இலங்கையில் இந்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகவும் மந்தமான நிலையிலேயே காணப்படும். தற்போது 30 சதவீதமாகக் உள்ள பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும்.

எனவே, எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. கடனை மறுசீரமைக்கும் வரை இலங்கை வாங்கிய கடனுக்காக எந்த தொகையையும் திருப்பிச் செலுத்த முடியாது. இதனை கடன் வாங்கியவர்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இதை கடன் தவணை கட்டத் தவறியதன் முந்தைய நிலை என்று கூறலாம். கூடுதல் கடனுக்காக, சர்வதேச நிதியத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். கடனளித்தவர்களிடம் கடன் மறுசீரமைப்பு செய்யுமாறும் பேசி வருகிறோம்.’’ என்றார்.

இதன் மூலம் இலங்கை திவாலாகி வருவது உறுதியாகி உள்ளது. இலங்கையை இக்கட்டில் இருந்து மீட்க மேலும் ₹30 ஆயிரம் கோடி தேவை என அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த தொகையை சர்வதேச அமைப்புகள் வழங்கி கடனை மறுசீரமைத்தால் மட்டுமே இலங்கையை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க முடியும். இந்த நிலையில், இலங்கை திவாலாகி வருவதால், கடன் கொடுக்க முன்வரும் நாடுகள் கூட, எதிர்வரும் காலங்களில் கடன் தருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. வெளிநாடுகள், வங்கிகள், சர்வதேச நிதியம் உள்ளிட்டவற்றில் மொத்தம் ₹3.82 லட்சம் கோடிக்கு இலங்கை கடன் வாங்கி உள்ளது.

9 அமைச்சர்கள் பதவி ஏற்பு

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவையில் 4 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றிருந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசில், எந்த எதிர்க்கட்சியும் அமைச்சரவையில் இடம் பெற விரும்பவில்லை. இதற்கிடையே, பல்வேறு தேசிய கட்சிகளுடன் ரணில் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அரசில் பங்கேற்க முக்கிய கட்சிகள் ஒப்புக் கொண்டன.

இதன்படி, நேற்று 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு அதிபர் கோத்தபய பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 9 அமைச்சர்கள், இலங்கை சுதந்திர கட்சி, இலங்கை பொதுஜன பெராமுனா, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இதில், கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுசில் பிரேமஜயந்த, கடந்த மகிந்தா ஆட்சியில் அரசை விமர்சித்ததால், அதிபர் கோத்தபயவால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி7 நாடுகள் கடன் உதவி

கடும் சிக்கலில் இலங்கை தவிக்கும் நிலையில், அந்நாட்டிற்கு கடன் வழங்கி உதவ தயாராக இருப்பதாக ஜி7 நாடுகள் தெரிவித்துள்ளன. ஜி7 அமைப்பில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதனை இலங்கை பிரதமர் ரணில் வரவேற்றுள்ளார். அவர் தனது டிவிட்டரில், ‘‘ஜி7 நாடுகள் அமைப்பு இலங்கைக்கு கடன் வழங்கி உதவுவதாக கூறியிருப்பதை வரவேற்கிறேன். சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மூலம் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீளும்’’ என கூறி உள்ளார்.

Related Stories: