வெம்பக்கோட்ைட அகழாய்வில் புகைபிடிப்பான் கருவி கண்டெடுப்பு

சிவகாசி: வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நேற்று நடந்த அகழாய்வில் புகைபிடிப்பான் கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை தோண்டப்பட்ட 5 குழிகளில் பல நிறங்களில் பாசி மணிகள், சுடுமண்ணாலான விளையாட்டு வட்டச்சில்லுகள், சூதுபவளம், பானை, பொம்மைகள், அகல்விளக்குகள், விலங்குகளின் எலும்புகள் ஆகியவை கிடைத்தன. சில தினங்களுக்கு முன் 6வது குழியில் நடந்த அகழாய்வில், சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கருவி, பானைகள் முன்னோர் பயன்படுத்தியதற்கான அடையாளமாக ஏராளமான பானை ஓடுகள் கிடைத்தன.

நேற்று நடந்த அகழாய்வில் மீண்டும் டெரகோட்டா களிமண்ணாலான புகைபிடிப்பான் கருவிகிடைத்துள்ளது. இது அழகிய கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ‘ஆழம் அதிகரிக்க, அதிகரிக்க தினமும் பொருட்கள் கிடைத்தபடி உள்ளன. முன்னோர் பயன்படுத்திய புகைபிடிப்பான் கருவி நேற்று கிடைத்துள்ளது. இது கலைநயமிக்கதாக உள்ளது. நமது முன்னோர் கலைநயமிக்க பொருட்களை வடிவமைப்பதில் திறமைசாலிகள் என்பதற்கு இது சான்றாகும்’ என்றார்.

Related Stories: