நெல்லை கல்குவாரியில் சிக்கிய 6வது நபரை மீட்க ராட்சத பாறைகள் துளையிட்டு தகர்ப்பு: 500 அடி தூரத்தில் போலீசார் நிறுத்தம்

நெல்லை: நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தை அடுத்த அடைமிதிப்பான் குளம் பகுதி கல்குவாரியில் 14ம் தேதி நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில் லாரி மற்றும் பொக்லைன் டிரைவர், கிளீனர்கள் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இவர்களில் விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முருகன், நாட்டார்குளத்தைச் சேர்ந்த விஜய் ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இளைய நயினார்குளத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் ஆயன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து 6வது நபர் தச்சநல்லூர், ஊருடையான்குடியிருப்பைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் உடலை மீட்க கலெக்டர் விஷ்ணு, எஸ்.பி. சரவணன், தீயணைப்புத் துறை துணை இயக்குநர் விஜயகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் நெல்லை சத்தியகுமார், தூத்துக்குடி குமார், கன்னியாகுமரி சரவணபாபு ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தொழில் பாதுகாப்பு படை முன்னாள் வீரர் மைக்கேல் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு வீரர்கள், குவாரி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

6வது நபர் ராஜேந்திரன் பெரிய, பெரிய பாறைகளுக்கு நடுவில் சிக்கியிருக்கலாம், அப்பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இதையொட்டி அந்த பெரிய பாறைகளை உடைப்பதற்காக மீட்புக் குழு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து பெரிய, பெரிய பாறைகளில் 32 துளைகள் இடப்பட்டு, டெட்டனேட்டர் குச்சிகள் வைத்து தகர்க்கும் பணி இன்று காலையில் துவங்கியது. இந்த பெரிய அளவிலான பாறைகளை தகர்க்கும் பணிக்காக 500 அடி தூரத்தில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதையொட்டி 500 அடி தூரத்தில் நிறுத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குவாரிக்கு வெளியாட்கள் யாரும் வராத வகையில் அதன் வழிகள் மூடி சீல் வைக்கப்பட்டது. குவாரி நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர். வெடி வைத்து பாறைகள் தகர்த்த பின்னர், பாறைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து 6வது நபர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, அவரை மீட்கும் பணி தொடரும் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories: