திருவலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் அவதி

திருவலம்: திருவலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆபத்தான பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழை மற்றும் தற்போது பரவலாக பெய்துவரும் மழைக்காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்குகிறது. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவருகிறது. இதேபோல் திருவலம் முதல் ஆந்திர மாநிலம் செல்லும் பிரதான சாலையான சென்னை-சித்தூர் தேசிய நெடுஞ்சாலை சேதமானது.

தற்போது பெய்துவரும் மழையால் சாலைகளில் மேலும் குண்டும் குழியும் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாலும், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் பழுதான சாலையில் சிக்கி விபத்து ஏற்படுகிறது.

குறிப்பாக இச்சாலையானது தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தை இணைக்கும் சாலை என்பதால் கனரக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்படுகிறது. அதேபோல் சிப்காட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமாகி இருக்கும் இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: