மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

அம்பை: மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் மழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒருவாரமாக நன்றாக மழை பெய்து வருகிறது. அம்பாசமுத்திரம் வனக்கோட்ட மணிமுத்தாறு, மாஞ்சோலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 229 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது, வனப்பகுதியில் 3.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவி பகுதியை பார்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றும், அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வனத்துறை தெரிவித்துள்ளது. நீர்வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அம்பாசமுத்திரம் வன உயிரின காப்பாளரும் புலிகள் காப்பக துணை இயக்குனருமான செண்பக பிரியா தெரிவித்துள்ளார்.

Related Stories: