திமுக ஆட்சியை வீழ்த்த நினைத்தால் நடக்காது: துரைமுருகன் ஆவேசம்

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை என்ற தலைப்பில் தமிழக பட்ஜெட் விளக்க கூட்டம் நேற்று மாலை கொளத்தூர் அடுத்த அகரம் சந்திப்பில் நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மகேஷ்குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ஓராண்டில் என்ன சாதனை செய்தீர்கள் என்று கேட்டால், எந்த ஒரு எதிர்க்கட்சிகாரனும் கைநீட்டி குற்றம் சொல்லாத அளவிற்கு சாதனை படைத்துள்ளோம். 10 ஆண்டு காலம் அமைச்சராக இருந்தவர்கள் யாருமே எங்களை குறை கூறவில்லை. எந்த முதல்வரும் உயிரை பணையம் வைத்து கொரோனா காலத்தில் பணியாற்றியதை பார்த்திருக்க முடியாது. அந்த வகையில் மு.க.ஸ்டாலின் மிக சிறப்பாக செயலாற்றினார். மழை வெள்ள பாதிப்பில் நடந்து சென்று பாதிப்புகளை பார்வையிட்டு சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சரவை கூடி என்ன முடிவு எடுக்கிறதோ அதை செய்வதுதான் ஆளுநரின் வேலை. இது சுப்ரீம் கோர்ட் உத்தரவு. இது நமக்கு சாதகமான ஒன்று. கலைஞரிடம் பெற்ற அனுபவங்கள் தற்போது எனக்கு கை கொடுத்து வருகிறது. அவர் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய முடிகிறது. இந்த ஆட்சியை இறக்கி விடலாம் என்று நினைத்தால் நடக்காது. அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை இறைக்கலாம். ஆனால் ஆட்சியை இறக்க முடியாது. ஒன்றிய அரசிடம் வம்புக்கு செல்ல மாட்டோம். வந்தால் பார்த்து கொள்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கொளத்தூர் தொகுதியில் எப்படி மு.க.ஸ்டாலின் பணியாற்றினாரோ அதே போன்றுதான் முதல்வராக ஆன பின்பும் பணியாற்றி கொண்டிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு நேரடியாக இரண்டரை கோடி மக்கள் இந்த ஆட்சியால் பயன் பெற்றுள்ளார்கள். புயல், மழை, ஆட்கொல்லி நோய் என எதுவானாலும் வீதிக்கு வந்து முதல் ஆளாக மக்களுக்கு உதவிகளை செய்கின்ற ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. ஒரு நாளைக்கு 19 மணிநேரம் பணியாற்றுகிறார். நாம் 12 மணி நேரமாவது பணியாற்ற வேண்டும். இன்னும் அரை நூற்றாண்டுக்கு இந்த இயக்கத்தை அசைத்துப் பார்க்கின்ற சக்தி யாருக்கும் இருக்காது’ என்றார்.

ஜெகத்ரட்சகன் எம்பி பேசுகையில், ‘ஓராண்டு சாதனையை ஒரு நூற்றாண்டு உட்கார்ந்து பேசலாம். அவ்வளவு நீண்ட நெடிய வரலாற்றை செய்து முடித்திருக்கிறார் முதல்வர். தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு வரலாற்று திருப்புமுனையை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். அறநிலைய துறை சார்பில் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவும் ஓராண்டின் சாதனை. ஒரு ஆன்மீக புரட்சி செய்து கொண்டிருக்கின்ற ஆட்சியாக இது விளங்குகிறது’ என்றார். நிகழ்ச்சியில் கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல் சென்னை மேயர் பிரியா, திருவிக நகர் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் நாகராஜன், ஐசிஎப் முரளி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: