நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் கைது: தனிப்படை போலீஸ் அதிரடி

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திசையன்விளையை சேர்ந்த ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை மங்களூருவில் தனிப்படை கைது செய்தது. நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவில் அடைமிதிப்பான் குளம் உள்ளது. அங்குள்ள கல்குவாரியில் கடந்த 14ம் தேதி பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது.

பொக்லைன் மற்றும் லாரி டிரைவர்களான நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35), இளையநயினார் குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய் (27), பொக்லைன் கிளீனர் ஆயன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். நெல்லை கல்குவாரி விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் குவாரி உரிமையாளரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கல்குவாரி விபத்து தொடர்பான வழக்கை விசாரிக்கும் நாங்குநேரி ஏ.எஸ்.பி-யான ராஜா சதுர்வேதி அமைத்துள்ள தனிப்படையினர் இருவரையும் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் தற்போது 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: