ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது: ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

சென்னை: ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது என்று ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார். சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 97 கோடி ரூபாய் செலவில் அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிவேக ரயிலுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக புதுடெல்லி - வாரணாசி இடையே இயக்கப்படும் இந்த ரயிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள இணைப்பு வண்டி தொழிற்சாலையில் உருவாக்கப்படும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் மாதிரிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், ரயில்வே துறையை உலக தரத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம் என்றார். அந்த வகையில் சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையின் வந்தே பாரத் ரயில்கள் உலகத்தரம் வாய்ந்தவைகளாக உருவாக்கப்படுவது பெருமையாக உள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் சென்னை, எழும்பூர், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய 5 ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 30 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக நடப்பு பட்ஜெட்டில் 3,865 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், இது காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியை விட 3 மடங்கு அதிகம் என்று கூறியுள்ளார். ரயில்வேத்துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்றும் ரயில்வே துறையை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்று தரமான ரயில்கள் மூலமாக நல்ல பயன் அனுப்புவதே பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம் என்று கூறினார்.

Related Stories: