அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட மோதலால் தாமதம் : இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதில் ஓபிஎஸ், இபிஎஸ்  இடையே உச்சக்கட்ட மோதல் நிலவுவதால், அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் பெயர்களை இன்று அல்லது நாளை அறிவிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 57 மாநிலங்களவை பதவியிடங்களை நிரப்ப ஜூன் மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிகளும் அடங்கும். இவர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்கள் நிலவரப்படி, திமுக 4, அதிமுக 2 இடங்களில் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 24ம் தேதி தொடங்குகிறது. திமுக 3 வேட்பாளர் பட்டியலை கடந்த 15ம் தேதி அறிவித்து விட்டது. ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் 2 மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? என்ற கேள்வி கடந்த 10 நாட்களாக எழுந்துள்ளது. குறிப்பாக, இந்த பதவியை கைப்பற்ற அதிமுக முன்னணி தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, கோகுல இந்திரா, இன்பதுரை உள்ளிட்ட பலரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு கட்சியில், கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என்பதோடு, 2021ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் எம்எல்ஏ தேர்தலில் நின்று தோல்வி அடைந்தவர்கள். மக்கள் செல்வாக்கை இழந்த இவர்கள், தற்போது கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து மாநிலங்களவை எம்பி பதவியை பிடிக்க முயற்சி செய்வதாக கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகிறார்கள். அதேநேரம், தென்மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே இந்த முறை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில்தான், மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்ய அதிமுக மூத்த நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட 21 நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 4 தலைவர்கள் மட்டும் தனியாக பேசினர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தனது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். இதனால், நேற்று இரவு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

இதனால் அதிமுக கட்சி தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். இன்றும் முக்கிய தலைவர்கள், தொலைபேசி மூலம் ஒருவருக்கொருவர் பேசி வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் வருகிற 24ம் தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது. அதனால், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 அதிமுக வேட்பாளர்களை இன்று அறிவிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி இன்று அல்லது நாளைக்குள், கட்சி தலைமை ஒரு முடிவு எடுத்து அறிவிக்கும் என்றே மூத்த அதிமுக நிர்வாகி ஒருவர் கூறினார்.

Related Stories: