கடலூர் நாகார்ஜுனா தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ: வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

கடலூர்: கடலூர் நாகார்ஜுனா தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் ஆலப்பாக்கம் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் நாகார்ஜுனா தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆளை செயல்படாமல் உள்ளதால் ஆலையில் உள்ள இரும்புதளவாட பொருட்கள் மற்றும் காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி அதிகாலை இரும்பு தளவாட பொருட்களை கொள்ளையடிக்க மர்மநபர்கள் வந்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கொள்ளையடிக்க வந்தவர்களை தடுக்க துரத்தி செல்லும் போது, காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொள்ளை கும்பல் தப்பிச் சென்றது. இந்நிலையில் இன்று அதிகாலை கொள்ளை கும்பல் காப்பர் கம்பிகளை கொள்ளையடிப்பதற்காக ஆலையில் உள்ள வயர்களில் தீ வைத்தனர். இதனால் ஆலையில் உள்ள வயர்கள் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    

Related Stories: