தோழி பிறந்தநாள் விழாவில் : கேக் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தாஜ்புரா பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவரது 2வது மகள் அபிராமி (16). இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துவந்தார். இந்நிலையில் அபிராமியின் தோழிக்கு நேற்றுமுன்தினம் பிறந்த நாள். இதனால் அபிராமி அன்று மாலை, தோழியின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றார். அங்கு கேக் சாப்பிட்டுள்ளார். அன்றிரவு வீடு திரும்பிய அவர் எதுவும் சாப்பிடவில்லையாம். அவரது தாய் கேட்டதற்கு, ‘தோழியின் வீட்டில் அதிகமாக கேக் சாப்பிட்டுவிட்டேன். எனவே இரவு உணவு வேண்டாம்’ எனக்கூறினாராம். ஆனால் சிறிதுநேரத்தில் தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அவரது தாய், அங்குள்ள ஒரு கடையில் சோடா வாங்கி கொடுத்துள்ளார். அதனை அபிராமி குடித்துவிட்டு அங்குள்ள அறையில் தூங்கச்சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை நீண்டநேரமாகியும் அபிராமி தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய், உள்ளே சென்றுபார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் அபிராமி மயங்கி கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அபிராமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அளவுக்கு அதிகமாக ேகக் சாப்பிட்டதால் உணவு ஒவ்வாமை (புட் பாய்சன்) ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இருப்பினும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: