பெகாசஸ் உளவு வழக்கு : விசாரணை குழுவுக்கு கூடுதல் அவகாசம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் பிரபலங்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்பட பலரது தொலை பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில், உறுப்பினர்களாக அலோக் ஜோஷி மற்றும் சந்தீப் ஓபராய் நியமிக்கப்பட்டனர். இந்த குழு பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் இன்று இவ்வழக்கு தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குழுவின் தரப்பில், ‘இதுவரை 29 செல்போனின் தகவல்கள் குறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதுவரை இடைக்கால அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும்’ என்று கோரப்பட்டது. இதையேற்ற தலைமை நீதிபதி அமர்வு, ‘பெகாசஸ் வழக்கில் விசாரணைக் குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. வரும் ஜூன் 20ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும்’ என்று உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது.

Related Stories: