அமைந்தகரையில் பட்டப்பகலில் நடுரோட்டில் பைனான்சியர் வெட்டி கொலை சிசிடிவி காட்சியால் பரபரப்பு

அண்ணாநகர்: சென்னை சேத்துப்பட்டு, வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (36), இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் விடுவது மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் மீது கீழ்ப்பாக்கம், டி.பி சத்திரம் ஆகிய காவல் நிலையத்தில் கொலை முயற்சி, பெண் வன்கொடுமை, அடிதடி மற்றும் ஆயுதங்கள் வைத்திருப்பது போன்ற வழக்குகள் உள்ளன. கடந்த 18ம் தேதி அமைந்தகரை அடுத்த செனாய் நகர் அருகே  6 பேர் கும்பலால் நடுரோட்டில் ஆறுமுகம் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் 6 தனிப்படை அமைத்து, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டும் காட்சி தெரிந்தது. இந்த காட்சியை வைத்து விசாரித்ததில், சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி உஷ் (எ) சந்திரசேகர் (28) தலைமையிலான கும்பல், ஆறுமுகத்தை வெட்டி கொன்றது தெரிந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் பிரபல ரவுடி உஷ் (எ) சந்திரசேகர், இவரது கூட்டாளி ரவுடி ரோகித்ராஜ் (25) ஆகியோர் சரணடைந்தனர். சந்திரசேகர் மீது சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் 2 கொலை வழக்கு மற்றும் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் அமைந்தகரை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. ரோகித்ராஜ் மீது டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு, அசோக் நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு, மதுரையில் ஆயுதங்கள் வைத்திருப்பது போன்ற வழக்குகள் உள்ளது. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: