தமிழகத்தில் ஓராண்டில் 31 அரசு கல்லூரிகள் துவக்க அனுமதி: அமைச்சர் பொன்முடி தகவல்

திருவாரூர்: திருவாரூரில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, காட்டூரில் உள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் திருவாரூர் என்ற பெயரை பதித்தவர் கலைஞர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலைக்கு கலைஞர் நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்தார். அவரது வழியில் மு.க.ஸ்டாலினும் 7 பேர் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.

அதன்படி தமிழக அரசின் ஓராண்டு ஆட்சியின் முயற்சி காரணமாக தான் பேரறிவாளன் விடுதலை கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் திருவாரூரில் நடந்த தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்  அமைச்சர் பொன்முடி பேசியதாவது: இந்த ஓராண்டு காலத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் உயர் கல்வித்துறை சார்பில் 20 கல்லூரிகள், அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள், கூட்டுறவுத்துறை மூலம் ஒரு கல்லூரி என 31 அரசு கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டுக்குள் 60 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர்  மு.க.ஸ்டாலின் தான் என்றார்.

Related Stories: