பேய் பிடித்திருப்பதாக கூறி கல்லூரி மாணவியை தீக்குழியில் இறக்கி சித்ரவதை: போலி மந்திரவாதி கைது

திருமலை: பேய் பிடித்திருப்பதாக கூறி கல்லூரி மாணவியை தீக்குழியில் இறக்கி சித்ரவதை செய்த போலி மந்திரவாதி கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் விக்ராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவருக்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதாம். மேலும் தனிமையில் இருக்கும்போது அடிக்கடி தானாக யாரிடமோ பேசிக்கொண்டிருப்பாராம். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் மாணவியின் பெற்றோரிடம், ‘உங்கள் மகளின் போக்கை பார்த்தால் அவருக்கு பேய் பிடித்திருக்கும் போல் தெரிகிறது’ என கூறியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மாணவியின் பெற்றோர் தங்களது மகளுக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் பலன் இல்லாத நிலையில் பர்கி கிராமத்தை சேர்ந்த ரபீ என்ற மந்திரவாதியை அணுகியுள்ளனர்.

அவர் மாணவியை பரிசோதித்து, ‘உங்கள் மகளுக்கு பேய் பிடித்திருப்பது உண்மைதான். அதனை விரட்ட தீக்குழியில் உங்கள் மகளை இறக்கவேண்டும்’ என கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வேறு வழியின்றி அதற்கு சம்மத்தித்துள்ளனர். இதற்காக நேற்று மந்திரவாதியின் வீட்டின் அருகே பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு நிலக்கரியால் எரியூட்டப்பட்ட தீக்குழியில் அந்த மாணவியை நடந்து வரும்படி மந்திரவாதி கூறியுள்ளார். அதற்கு மாணவி, தன்னால் நெருப்பில் இறங்க முடியாது என கூறியுள்ளார். ஆனால் மாணவி எவ்வளவோ பிடிவாதம் செய்தும் அவரது பெற்றோரும், மந்திரவாதியும் கட்டாயப்படுத்தினர். இதனால் வேறு வழியின்றி மாணவி தீக்குழியில் இறங்கினார். அனல் தாங்க முடியாமல் கதறி துடித்த மாணவியை மந்திரவாதி மிரட்டியுள்ளார். அப்போது மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு தீக்குழியிலேயே விழுந்தார்.

இருப்பினும் அவரை எழுப்பி மயக்கத்தை தெளிய வைத்து தொடர்ந்து நடக்கும்படி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி பலத்த தீக்காயமடைந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தீக்காயத்துக்கான காரணம் குறித்து பெற்றோர் முன்னுக்குப்பின் முரணாக டாக்டர்களிடம் கூறினர். இதனால் சந்தேகமடைந்த டாக்டர்கள் உடனடியாக பர்கீ பகுதி போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து நடத்திய விசாரணையில் மேற்கண்ட விவரம் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மந்திரவாதி ரபீயை கைது செய்தனர். அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி நேற்றிரவு சிறையில் அடைத்தனர். மாணவியின் பெற்றோரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘அந்த மாணவிக்கு சில காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைக்கு உரிய மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவேண்டும். அதைவிடுத்து போலி மந்திரவாதிகளை நாடக்கூடாது’ என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: