சேலம் ஜிஹெச்சில் ஸ்கேன் பரிசோதனைக்காக நோயாளிகளை கைகளில் தூக்கிச்செல்லும் அவலம்-சக்கர நாற்காலி பற்றாக்குறையாம்...

சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில் தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், அவசர சிகிச்சை பிரிவுக்கு தினமும்  சாலை விபத்து, விஷம் அருந்தியவர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். இங்கு வரும் நோயாளிகளை வார்டுக்கு அழைத்துச்செல்ல ஸ்ட்ரெக்சர், சக்கர நாற்காலி ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, வார்டுகளில் உள் நோயாளியாக சிகிச்சை பெறுவோர் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்திற்கு வர வேண்டியதுள்ளது. இதனால் கால் முறிவு ஏற்பட்ட நோயாளிகள் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல ஸ்ட்ரெக்சர், சக்கர நாற்காலி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் நோயாளிகளை உறவினர்கள் கைகளில் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவசர சிகிச்சை பிரிவில் போதிய ஊழியர்களும் இல்லாததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், ‘‘சேலம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். குறிப்பாக, வார்டுகளில் கை, கால் முறிவு, சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு அடிக்கடி எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை செய்ய சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்திற்கு செல்ல வேண்டியதுள்ளது. ஒரு சில நேரங்களில் ஸ்ட்ரெக்சர், சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நோயாளிகளை நடக்க வைத்தும், கைகளில் தூக்கிக் கொண்டும் செல்ல வேண்டியுள்ளது.

அதேபோல், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல ஸ்ட்ரெக்சர், சக்கர நாற்காலி 24 மணி நேரமும் வைத்திருக்க வேண்டும். ஆனால், பற்றாக்குறையால் நோயாளிகளை சிகிச்சைக்கு உடனடியாக அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே அவசர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் ஸ்ட்ரெக்சர், சக்கர நாற்காலி வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.’’ என்றனர்.

Related Stories: