ஜூன் 3ல் அணைகள் திறப்பு? குமரியில் கன்னிப்பூ சாகுபடி பணி தொடக்கம்- விளைநில பரப்பளவு வேகமாக சரிவு

நாகர்கோவில் :  குமரியில் கன்னிப்பூ சாகுபடி உழவு பணிகள் தொடங்கியுள்ளன. குமரியில் ஆண்டுதோறும் கன்னிப்பூ மற்றும் கும்பபூ என்று இரு பருவமாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 12 ஆண்டுகள் முன்பு 18 ஆயிரம் ஹெக்டேராக இருந்த நெல் விவசாயம் வீட்டு மனைகள் ஆதிக்கம் காரணமாக தற்போது, வேகமாக சரிந்து தற்போது வெறும் 6 ஆயிரம் ஹெக்டேருக்கும் குறைவாக பயிர் செய்யப்படுகிறது.  இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக குமரியில் தொடர் மழை பொழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போதும் குமரியில் தொடர்ச்சியாக மழை பெய்வதால், பொடி விதைப்பு நடைபெறும் சுசீந்திரம், தேரூர், பறக்கை, தெங்கம்புதூர் பகுதிகளில் கூட, நடவுப்பணிகள் கடந்த மாதமே தொடங்கி விட்டன.  தற்போது அணைகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து அணைகள் முழுகொள்ளவு எட்டும் நிலையில் உள்ளதால், ஜூன் 3ம் தேதி பாசனத்திற்காக அணைகள் திறக்க அரசு ஆணையிடலாம் என என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாஞ்சில் நாடு முழுவதும் வயல்களில் உழவு பணிகள் மற்றும் நாற்று பாவுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பூதப்பாண்டி, தாழக்குடி, அருமநல்லூர் என சுமார், 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நாற்று பாவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த கும்ப பூ சாகுபடியின் போது, அரசு நெல்கொள்முதல் மையங்கள் மூலம் விவசாயிகளிடம் நெல் நல்ல விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால், கடந்த முறை விவசாயிகள் நஷ்டம் இன்றி ஓரளவு லாபம் அடைந்தனர். எனவே தற்போது கன்னிப்பூ சாகுபடியில் வயல்களை உழுதல், நாற்று நடுதல், நடவு பணிகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி விவசாயி செண்பகசேகர பிள்ளை கூறியதாவது: நடப்பாண்டில் அணைகள், குளங்களில் தண்ணீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதுடன், தொடர் மழை பெய்து  வருவதால், பொடி விதைப்பின்றி நேரடி நடவு நடைபெற்றுள்ளது. தற்போது 20 சதவீத இடங்களில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. அணைகள் ஜூன் 3ல் திறக்கப்படும் எனக் கூறப்படுவதால், நாற்று நடும் பணிகள் தொடங்கியுள்ளன என்றார்.

ரயில் பாதையால் 500 ஏக்கர் பயிரிடவில்லை

குமரியில் வீட்டு மனைகளாக விளைநிலங்கள் மாற்றப்பட்டதால், 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் கபளிகரம் ஆன நிலையில், சுமார், 500 ஹெக்டேர் நிலங்களில், ரயில் இரட்டை பாதை பணிகள் நடைபெறுவதன் காரணமாக தண்ணீர் விட முடியாமல் பயிர் செய்ய இயலாமல்  பாதிக்கப்பட்டுள்ளது.  அந்த பகுதிகளில் கடந்தாண்டை தொடர்ந்து இந்தாண்டும் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Related Stories: