100 ஆண்டு பழமை வாய்ந்த நிலக்கரியில் இயங்கும் ஊட்டி ரயில் இன்ஜின் பராமரிப்புக்குப் பின் மேட்டுப்பாளையம் வந்தது

மேட்டுப்பாளையம் :  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை ரயில் இயக்க ஏழு மலை ரயில் இன்ஜின்கள் உள்ளன. இவை நிலக்கரி, பர்னஸ் ஆயில் மற்றும் டீசல் மூலம் தற்போது இயக்கப்பட்டு வருகிறது, இந்தநிலையில் 1914 ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட நிலக்கரியால் இயங்கும் மலை ரயில் இன்ஜின்   1918 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டு ஊட்டி மலை ரயில் இயக்கப்பட்டது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த இன்ஜின் கடந்த 2017 ஆம் ஆண்டு பழமை காரணமாக நிறுத்தப்பட்டது. மேலும் இந்த இன்ஜினை ஏதாவது ரயில் நிலையத்தில் கண்காட்சிக்காக வைக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு மலை ரயில் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பழமையான இந்த மலை ரயில் இஜ்னினை மீண்டும் பழுது பார்த்து ரயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

 இக்கோரிக்கையை ஏற்று ரயில்வே அதிகாரிகள் திருச்சி பொன்மலை ரயில்வே பணி மனைக்கு 2018 ஆண்டு கொண்டு சென்று பராமரிப்பு பணிகள் செய்து அந்த இன்ஜினை தற்போது புதுப்பித்து உள்ளனர். பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு லாரி மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயிலில் இந்த இன்ஜின் விரைவில் இணைக்கப்பட உள்ளது. நிலக்கரியால் இயங்கும் பழமையான இந்த இன்ஜின் மீண்டும் மலை இரயிலில் இயக்குவது மலை ரயிலுக்கு மேலும் பெருமை சேர்க்க உள்ளது என்று மலைரயில் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: