நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம்-நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருத்துறைப்பூண்டி : நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகில் சாலையில் மீண்டும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி-பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் இப்பள்ளி அமைந்துள்ளதால் இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் இவ்வழியே அதிகமாக வந்து செல்கிறது.

இந்த சாலை நாகை பைபாஸ் சாலையில் இணைவதால் நாகப்பட்டினம் செல்லும் வாகனங்களும் இவ்வழியில் செல்கிறது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரும் நேரத்திலும், பள்ளி விடும் நேரத்திலும் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் சாலையை கடக்க முடியாமல் மாணவர்கள் திண்டாடுகின்றனர். மாணவர்கள் சாலையை கடந்து செல்லும்போது வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்பகுதியில் ஏற்கெனவே விபத்து நடைபெற்றதால் பள்ளி அருகில் இரண்டு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வேகத்தடை நீக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மீண்டும் வேகத்தடை அமைத்துதர நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: