தொடர் மழை எதிரொலி சூரநத்தம் தடுப்பணையில் திடீர் வெள்ளப்பெருக்கு-விவசாயிகள் மகிழ்ச்சி

அரூர் : தர்மபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், அரூர் அடுத்த சூரநத்தம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அக்னி நட்சத்திர காலம் தொடங்கியது முதலே, தர்மபரி மாவட்டத்தில் 108 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அரூர் சுற்றுவட்டார பகுதிகளான ஏ.கே.தண்டா, வேலனூர் மற்றும் சிட்லிங் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, சூரநத்தம் தடுப்பணையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கோடை தொடங்கும் முன்பே சுட்டெரித்த கடும் வெயிலால் விவசாய கிணறுகளில் தண்ணீர் தரைமட்டம் வரை தாழ்ந்து போனது. இதனால் இப்பகுதியில் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. கால்நடைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இனி வரும் காலங்களில் என்ன செய்ய போகிறோம் என அச்சத்தில் இருந்தோம்.

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, சூரநத்தம் தடுப்பணையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணை நிரம்பி வழிவதால், இங்குள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் ஊற்று பெருக்கெடுத்து, போதிய அளவில் தண்ணீர் உள்ளது. இதனால் இரண்டாம் போக சாகுபடி வரையும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது,’ என்றனர்.

Related Stories: