×

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு..!

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முன்னதாக அதிமுக அட்சியில் அமைச்சராக இருந்தபோது சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இது தொடர்பாக 10 வாரத்தில் விசாரணையை முடித்து டெண்டர் முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, தனக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு  செய்திருந்தார். இதனால், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கின் விவரங்களை எஸ்பி வேலுமணியிடம் வழங்குவோம் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில்,தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை எஸ்.பி.வேலுமணியிடம் வழங்க தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால்,எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரனை தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.அதே சமயம்,இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஏதேனும் இருந்தால் அதனை சென்னை உயர்நீதிமன்றம் நடத்தலாம் என்றும், எஸ்.பி.வேலுமணிக்கு இதில் ஏதேனும் முறையீடு வேண்டும் என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : AIADMK ,minister ,S.P. Supreme Court ,Velumani , AIADMK ex-minister S.P. Supreme Court refuses to dismiss tender malpractice case against Velumani ..!
× RELATED அதிமுக எப்போதும் போல் வலிமையாக உள்ளது;...