வேலூர் நறுவீ மருத்துவமனை, ரோட்டரி சங்கம் இணைந்து போக்குவரத்து காவலர்களுக்கான நுரையீரல் பரிசோதனை முகாம்-எஸ்பி தொடங்கி வைத்தார்

வேலூர் : வேலூர் நறுவீ மருத்துவமனை, ரோட்டரி சங்கம் இணைந்து போக்குவரத்து காவலர்களுக்கான நுரையீரல் பரிசோதனை முகாமை எஸ்பி தொடங்கி வைத்தார்.

வேலூர் டோல்கேட்டில் உள்ள ஆபீசர்ஸ் கிளப் அரங்கில் வேலூர் நறுவீ மருத்துவமனை, ரோட்டரி சங்கம் இணைந்து போக்குவரத்து காவலர்களுக்கான நுரையீரல் பரிசோதனை முகாம் நேற்று நடத்தியது. ரோட்டரி சங்க தலைவர் ஜே.சுபாஷ் சந்திரன் வரவேற்றார். ரோட்டரி சங்க சமுதாய திட்ட இயக்குநர் டி.திருமாறன் விளக்க உரையாற்றினார். இந்த முகாமில் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் பங்கேற்று பேசியதாவது:

போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலரின் நலனுக்காக இந்த முகாம் நடத்தப்படுவது பாராட்டுக்குரியது. சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாச பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த பாதிப்பு அதிகரிக்கும்போது அவர்களுக்கு கொரோனா எளிதில் தாக்கும் நிலை உண்டாகும்.

இதை கருத்தில் கொண்டு வேலூர் ரோட்டரி சங்கத்தின் வேண்டுகோளின்பேரில் போக்குவரத்து காவலர்களின் நலனுக்காக எங்களது நறுவீ மருத்துவமனைக்கு இந்த முகாமை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக நன்றி தெரிவிக்கிறேன். போக்குவரத்து காவலர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாம், அவர்களது நுரையீரல் பாதிப்பை தடுக்க உதவியாக இருக்கும் இவ்வாறு பேசினார்.முன்னதாக முகாமை தொடங்கி வைத்து எஸ்பி ராஜேஷ் கண்ணன் பேசியதாவது:

எஸ்பியாக பொறுப்பேற்ற பிறகு போக்குவரத்து காவலர்களின் நலனுக்காக நடத்தப்படும் முதல் மருத்துவ பரிசோதனை முகாம் இது. இந்த முகாமை நடத்தும் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் சமுதாய நலப்பணிகளில் ஆர்வம் மிக்கவர். அவரது மருத்துவமனை சார்பில் இந்த பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளதற்கு நன்றி’ இவ்வாறு பேசினார். இதில் வேலூர் ஆபீசர்ஸ் கிளப் கவுரவ செயலாளர் வழக்கறிஞர் என்.சிவராஜ், வேலூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வி.சீனிவாசன், எஸ்.எம்பெருமாள் ஆகியோர் பேசினர். இதில், ஏடிஎஸ்பி கே.எஸ்.சுந்தரமூர்த்தி, டிஎஸ்பி இ.திருநாவுக்கரசு மற்றும் காவல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். முடிவில், வேலூர் ரோட்டரி சங்க செயலாளர் பி.குமார் நன்றி கூறினார்.

Related Stories: