ஆந்திராவில் ரூ ₹135 கோடி மதிப்பில் கால்நடைகளுக்காக மருந்தகத்துடன் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவை-முதல்வர் ஜெகன் மோகன் தொடங்கி வைத்தார்

திருமலை : ஆந்திராவில் ரூ 135 கோடி மதிப்பில் கால்நடைகளுக்கான மருந்தகத்துடன் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார். ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் கால்நடைகளுக்கான மருந்தகத்துடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆந்திர அரசால் வளர்ப்பு கால்நடைகளுக்கு சிறந்த மருத்துவ வசதி அளிக்கும் நோக்கில் ஒய்எஸ்எஸ்ஆர் நடமாடும் கால்நடை மருத்துவ சேவைக்காக சுமார் ரூ 278 கோடி மதிப்பில் மொத்தம் 340 ஆம்புலன்சுகள் வாங்க முடிவு செய்யப்பட்டது.

இதில் முதற்கட்டமாக ரூ 135 கோடி செலவில் 165 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. நாட்டில் எங்கும் இல்லாத வகையில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு வீதம் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு இணையான அதிநவீன வசதிகளுடன் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்கள் கொண்டு வரப்படுகின்றன.  அவற்றின் பராமரிப்புச் செலவையும் அரசே ஏற்க உள்ளது. 1962 என்ற எண் இலவச  ஆம்புலன்ஸ் சேவைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு போன் செய்து கால்நடைகளின் ஆரோக்கிய பிரச்னையை விளக்கினால் போதும் கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே  ஆம்புலன்ஸ் வாகனம்  சென்று மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

தேவைப்பட்டால், கால்நடைகளை சிறந்த மருத்துவ பராமரிப்புக்காக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இலவசமாக சிகிச்சை செய்து விவசாயியின் வீட்டிற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படும்.  இந்த ஆம்புலன்சில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், ஓட்டுநர் மற்றும் உதவியாளராக இருப்பார். 20 வகையான பரிசோதனைகள் மற்றும் 15 வகையான ரத்த பரிசோதனைகள் செய்ய நுண்ணோக்கி பொருத்தியுடன் அடிப்படை மருத்துவ சேவைகளுக்கு  பாலூட்டிகள், செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகளுக்கு அறுவை சிகிச்சைகள்  செய்வதற்கான ஏற்பாடுகளுடன் ஒரு சிறிய ஆய்வகம் மற்றும் அனைத்து வகையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுடன் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றுவதற்கான ஹை ஹைட்ராலிக் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவைப்பட்டால் ஹைட்ராலிக் லிப்ட் வசதியுடன் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச்சென்று அறுவை சிகிச்சை செய்யும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: