தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குற்றால அருவிகளில் குளிக்க தடை-புலியருவியில் அனுமதி

தென்காசி : குற்றாலத்தில் நேற்றும் சாரல் நன்றாக பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மதியத்திற்கு பிறகு மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.குற்றாலத்தில் இந்த ஆண்டு 15 நாட்களுக்கு முன்னதாக சீசன் துவங்கி உள்ளது. மேலும் சாரலும் நன்றாக பெய்து வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. வெயில் அவ்வளவாக இல்லை. நன்றாக சாரல் பெய்தது. இதமான காற்று வீசியது. மதியம் வரை மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக விழுந்தது.

ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. சாரல் காரணமாக அருவிகளில் மதியத்திற்கு பிறகு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் விழுந்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே நேற்று முன்தினமும் மெயினருவியில் மதியம் குளிக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலையில் ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. புலியருவியில் மட்டும் தடையின்றி குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவி வெண்ணைமடை குளம் படகு குழாம் நிரம்பி வழிகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் நன்றாக இருந்தது.

Related Stories: